எழுத்தாளர்: இந்தரா சௌந்தர்ராஜன்
மலேசியாவில் செட்டில் ஆகிருந்த தேவன் , தனது பூர்வீக சொத்தை விற்க இந்தியா வந்திருந்தான். ஏர்போட்டில் அவனைக் காந்தனும் ஆனந்தியும் மடக்க அதிர்ந்து போகிறான். தான் உயிருக்கு உயிராக காதலித்த மாமன் மகள் ஆனந்தி தற்போது காந்தனின் மனைவி. இவர்கள் ஏன் தன்னை இங்கே காண வர வேண்டும் என தேவன் விசாரிக்க , காந்தனோ அவர்கள் வாழ்வில் நடந்த அமானுஷமான விஷயங்களைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.

சினிமாவில் துணை நடிகையாக இருந்த தன் அக்காள் சிவகாமி பணம் காசுக்கு ஆசைப்பட்டு ஆனந்தியின் தந்தை தேவரை கல்யாணம் செய்துக்கொண்டாள் என கூறுகிறான் காந்தன். மந்திர தந்திரத்தில் வல்ல ராயம்மாளின் துணையோடு தேவரை முழுமையாக தன் வசம் ஆக்கிக்கொண்டாள் எனவும் சொத்து குடும்பத்திற்குள் இருக்கவேண்டும் எனும் காரணத்தால் தனக்கும் ஆனந்திக்குத் திருமணம் செய்துவிட்டதாக சொல்கிறான். தேவனை நினைத்துக் கொண்டிருந்த ஆனந்திக்கும் காலேஜில் ஒரு ஏழைப் பெண்ணைக் காதலித்த தனக்கும் ஆனந்த மல்லி எனப்படும் மல்லிகைப் பூவும் குங்குமமும் கொடுத்து வசியம் செய்துவிட்டதாக சொல்லவும் தேவன் நம்ப மறுக்கிறான்.
பணத்தாசையால் தன் அக்கா சிவகாமி ராட்சசியாகி விட்டதாகவும் இப்போது தேவன் சொத்து கேட்டு வீட்டுக்கு சென்றால் ஆபத்து நேரிடும் என எச்சரிக்கிறான். வசிய கட்டில் இருந்த காந்தனும் ஆனந்தியும் எப்படி இப்போது சுயஉணர்வோடு பேசுகிறார்கள் என கேட்கிறான் தேவன். அதற்கு தேவன் , தேனிலவு செல்ல புறப்பட்டபோது காரில் ஒரு மரப்பெட்டி இருந்ததாகவும் அதிலிருந்த துணியில் எழுதியிருந்ததுப்போல் அகத்திவனத்துக்கு சென்று தீர்த்தத்தில் குளித்ததும் சுயஉணர்வு வந்ததாக சொல்கிறான்.
ஆனால் தேவனோ இன்னமும் நம்ப மறுக்கிறான். சாட்சியாக காந்தன் அந்த மரப்பெட்டியைக் காண்பிக்கிறான். தேவன் அதை திறக்கவும் காற்று பலமாக வீசவே , அதிலிருந்த சிவப்புத்துணி பறந்து போகிறது. கடற்கரையில் அமர்ந்திருந்த ஒருவரின் மீது அது விழ அவர் திடுக்கிட்டு எழுகிறார். தன் குரு கனவில் , கடற்கரைக்குச் செல் என சொன்னது இதற்காகத்தான் என உரக்கச் சொல்கிறார். தன் பெயர் சங்கரின் எனவும் இந்த பெட்டி எப்படி அவர்களிடம் வந்தது என வினவுகிறார்.
சொத்தைக் கேட்க போகும் தேவனின் நிலை என்ன? காந்தனும் ஆனந்தியும் சொல்வது நிஜம் தானா?
ஆனந்த மல்லி அபாய மல்லியான கதையைத் தெரிந்துக்கொள்ள இந்த நாவலைக் கண்டிப்பாகப் படியுங்கள்.
