அந்த இருதயநோய் நிபுணரின் கிளினிக்கில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கைராசிக்கார மருத்துவரைக் காண அவர்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் , வரவேற்பாளர் மேசையை நோக்கி நடந்தார். அங்கே அமர்ந்திருந்த தாதியிடம், “நான் இங்கு கடந்த ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவர் ரமணனை 10:30 மணிக்கே சந்திருக்க வேண்டும். என்னால் இனிமேல் காத்திருக்க முடியாது. தயவு செய்து டாக்டரைக் காண வேறு ஒரு நாளைக்கு அப்பொய்ன்ட்மென்ட் தாருங்கள்” என பணிவாக கூறினார்.
பெரியவர் சொன்னதைக் கேட்டு கொண்டிருந்த மாது ஒருவர் பக்கத்திலிருந்த பெண்ணின் காதைக் கடித்தார். “இந்த மனிதருக்கு ஏறக்குறைய 80 வயதிருக்கும். காத்திருக்க கூட முடியாமல் அப்படி என்னதான் அவரச வேலையோ இவருக்கு?”
அந்த பெண் சொன்னது காதில் விழவும், பெரியவர் “உண்மைதான், எனக்கு இப்பொழுது 80 வயதாகிறது. அதனால் தான் மீதம் இருக்கும் கொஞ்ச காலத்தில், ஒரு நிமிடத்தைக் கூட விரயமாக்க விரும்பவில்லை” என சிரித்தவாறே சொன்னார்.
#சிந்தனை துளி
- நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிக்க போதுமான காலம் இருக்கிறதா என்று யோசிப்பது உண்டா?
- காலம் தவறினால், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நிகழும் பின்விளைவுகளை அறிவீர்களா?
- காலம் பொன் போன்றது! காலம் அறிந்து கடைமையாற்றுவோம்! அலட்சியம் கூடாது!
