ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற வைப்பார். அதன்பின் அக்கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் ஒவ்வொருவராக அடுப்பைப் பற்ற வைக்க பாட்டியிடம் நெருப்பு வாங்கிச் செல்வார்கள்.
இது தினசரி நடக்கும் வழக்கமாகிவிட்டது. நம் சேவல் இருப்பதால்தான் இந்த கிராம மக்களுக்கு பொழுது விடிவது தெரிகிறது. இல்லையெனில் அனைவரும் நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருப்பார்கள். நம்முடைய வீட்டில் நெருப்பு பற்ற வைக்காவிடில் இவர்கள் நெருப்புக்குத் திண்டாடி தான் அலைவார்கள் என பாட்டி நினைத்துக்கொண்டார்.
இப்படி தவறாக புரிந்துகொண்ட பாட்டி , தானும் சேவலும் இல்லாவிட்டால் கிராம மக்கள் என்ன பாடு படுவார்கள் என்பதைக் காண, யாரிடமும் சொல்லாமல் தன் சேவலைத் தூக்கிக்கொண்டு அடுத்த ஊரில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் பாட்டியைக் காணாத மக்கள், “அடடே எங்கே போய்விட்டார் இந்த பாட்டி” என நினைத்துக்கொண்டே தாங்களே நெருப்பு மூட்டி உணவை ஆக்கினர்.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. நாம் இல்லாததால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டியிருப்பார்களே. எழுப்ப சேவலும் இல்லை! நெருப்பில்லாமல் எப்படி சமைத்திருப்பார்கள்? என நினைத்து வருந்தினார் பாட்டி. அப்பொழுது அந்த பக்கம் வந்த பாட்டியின் கிராமத்தை சேர்ந்த ஒருவன், “ நீங்க இங்கதான் இருக்கீங்களா பாட்டி? உங்கள காணாம எல்லாரும் தேடுறாங்களே! என சொன்னான்.
தான் நினைத்து சரியாகி போனதே என பாட்டிக்கு ஒரே சந்தோசம். அவனிடம் “ஏன்யா மாடசாமி, ஒரு வாரமா நானும் சேவலும் இல்லையே பொழுது விடிந்ததா? நெருப்புக் கொடுக்க கூட நான் இல்லையே! கிராமத்துல எப்படி நெருப்பு மூட்டினாங்க? எப்படி சாப்பிட்டாங்க? என வினவினார்.
பாட்டியின் அறியாமைக்கு கண்டு சிரித்தான் மாடசாமி. “பைத்தியக்கார பாட்டியா இருக்கிங்களே! உங்களையும் சேவலையும் நம்பியா பூமி சுத்திகிட்டு இருக்கு? நீங்க இல்லனாலும் ஊர்ல எல்லாமே எப்போதும் போலத்தான் நடந்துக்கிட்டு இருக்கு. கிராமத்திற்கு போய் சேர்ற வழிய பாருங்க பாட்டி! என சொன்னான் அவன். அசடு வழிந்துக் கொண்டே பாட்டி, சேவலையும் தன் மூட்டையும் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடையைக் கட்டினார்.
#சிந்தனை துளி
- நம்மை எதிர்பார்த்துதான் உலகம் இயங்குகிறது என்பது அறியாமை.
- மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது!
