ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் பஞ்சத்தில் அடிப்பட, அவர்கள் வறுமையில் வாடினர். பிழைக்க வழி தெரியாமல் கடவுளை நோக்கி தவம் செய்யலாம் என முடிவெடுத்தனர். முடிவெடுத்தபடியே ஊன் உறக்கமின்றி கடவுளை நோக்கி நீண்ட நாட்கள் தவம் செய்தனர்.
அவர்களின் தவத்திற்கு மெச்சி கடவுள் தோன்றி “உங்களுக்கு என்ன வேண்டும்” என கேட்டார். தங்களின் வறுமையை போக்குமாறு வேண்ட, உடனே கடவுள் அவர்களுக்கு நான்காய் நறுக்கப்பட்ட குச்சிகளைத் தந்தார்.
“இந்தக் குச்சியை ஆளுக்கு ஒருவராக தலையில் வைத்துக்கொண்டு வடக்கை நோக்கி பயணியுங்கள். செல்லும் பாதையில் யார் தலையிலிருந்தாவது குச்சி கீழே விழுந்தால், விழுந்த இடத்தைத் தோண்டிப் பார்த்துக் கிடைத்தவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என சொல்லிவிட்டு மறைந்தார்.
நண்பர்கள் நால்வரும் வடக்கை நோக்கி புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் ஒருவன் தலையிலிருந்து குச்சி விழ, விழுந்த இடத்தைத் தோண்டி பார்த்தான். அங்கே அளவுகடந்த செம்பு கிடைக்கவே அதை எடுத்துக் கொண்டு ஊரைக் நோக்கி புறப்பட்டான்.
கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டாமவன் தலையிலிருந்து குச்சி விழுந்தது. விழுந்த இடத்தை தோண்டினால் அங்கே நிறைய வெள்ளி இருந்தது. அவனும் கிடைத்தை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பி சென்றான்.
சற்று தூரம் போனதும் மூன்றாமவனின் தலையில் இருந்த குச்சியில் விழ, விழுந்த இடத்தைத் தோண்டி பார்க்கவே அங்கே அநேக தங்கம் இருந்தது. அதை தோண்டி எடுத்த பிறகு அருகிலிருந்த நண்பனிடம் “இங்கே நிறையத் தங்கம் இருக்கிறது. நாம் இதை சரி பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என சொன்னான்.
அவனோ “இல்லை, சரிப்பட்டு வராது. நான் இன்னும் சிறிது தூரம் நடந்து போனால் என் தகுதிக்கு ஏற்ப விலை உயர்ந்த பொருள் கிடைக்கும். நீ வீட்டுக்கு செல்” என சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தான். தொலை தூரம் சென்றதும் அவன் தலையிருந்த குச்சியும் ஒரு வழியாக விழுந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவ்விடத்தைத் தோண்டி பார்க்க, அங்கே இருந்த பொருளைப் பார்த்த அவன் உடல் அதிர்ச்சியை உள்வாங்கியது.
அங்கே விலைகுறைவான இரும்புதான் இருந்தது. பேராசையால் தன் நண்பனின் பேச்சை கேட்காமல் வந்துவிட்டோமே என எண்ணி நொந்துக் கொண்டான். சரி மீதம் இருக்கும் தங்கத்தையாவது எடுத்து போகலாம் என எண்ணி தங்கமிருந்த இடத்திற்கு போனால் அங்கே வெறும் பள்ளம் தான் இருந்தது. உடனே வெள்ளியைத் தேடித் போனால் அங்கும் ஏமாற்றம் தான்.
செம்பு இருந்த இடத்திற்கு சென்றால் அங்கும் வெறும் பள்ளம்தான். பெருத்த ஏமாற்றத்துடன் நமக்கு கிடைத்த இரும்பையாவது எடுத்துக் கொண்டு போகலாம் என நினைத்துக் கொண்டு இரும்பு இருந்த இடத்திற்கு வந்து பார்த்தால் அதுவும் வெறும் பள்ளமாயிருந்தது!
#சிந்தனைத் துளி அதிக ஆசை, அதிக நஷ்டம் |