பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! இப்போது நிலைமை தலைகீழாக இருந்தது.
வயல்வெளிகள் வறண்டுபோயிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையே இல்லை. விளைநிலங்கள் தரிசு நிலங்களைப் போல் காணப்பட்டன. காலக் கொடுமையோ என்னவோ, அந்த கிராமத்தில் 10 ஆண்டுகளாக மழையே இல்லை. ஊரில் வறட்சி ஏற்பட்டு விவசாயத்தை நம்பி இருந்த மக்கள் பசி பட்டினியில் வாடினார்கள். இறுதில் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இடையில், மழையை வரவைக்க அநேக பூஜைகள், சாங்கியங்கள் ஒன்றும் வேலைக்காகவில்லை. அனைத்தையும் செய்தாகிவிட்டது, பலன் தான் இல்லை.
இந்த வேளையில் தான், ஊரில் ஒரு சந்நியாசி வந்தார். முற்றும் துறந்த அவர், மக்களின் நிலையைக் கண்டு வருந்தினார். அவர்கள் பஞ்சத்தைப் போக்க ஒரு யாகத்தை நடத்த முற்பட்டார். யாகம் எட்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது. கடைசி தினமான ஒன்பதாவது நாளில் அனைவரையும் வீட்டிலிருந்து ஒரு செம்பு பாட்குடத்தை எடுத்து வர சொன்னார். பூஜை வேளையில் ஒருவர் பின் ஒருவராக யாக குண்டத்தின் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் முடப்பட்ட தாழியில் பாலை ஊற்ற சொன்னார்.
மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவேற்றும் சமயம் தாழியிலிருக்கும் பாலை எடுக்கப் போனவருக்கு அதிர்ச்சி! அதில் பால் இல்லை வெறும் தண்ணீர் மட்டுமே இருந்தது. அப்போதுதான் அந்த உண்மை புலப்பட்டது. ஊரிலிருந்த மக்கள் அனைவரும் “மற்றவர்கள் பால் எடுத்து வந்திருப்பார்கள், நாம் ஏன் இந்த பஞ்ச காலத்தில் பாலை வீண் செய்யவேண்டும்” என்கிற நினைப்பில் செம்பில் தண்ணீர் மட்டுமே எடுத்துவந்திருகிறார்கள் என்று. அதனால்தான் தாழி முழுதும் தண்ணீர் மட்டும் நிரம்பியிருக்கிறது.
இந்த நிலையிலும் மக்களின் சுயநலத்தையும் அவநம்பிக்கையும் கண்டு மனம் வெதும்பினார் அந்த சந்நியாசி. அவர்களை நேரிட்டு “ இந்த சுயநல போக்கை நீங்கள் கைவிடும் வரை இந்த ஊரில் மழை பெய்யாது, பஞ்சமும் தீராது” என அழுத்தமாக கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து விலகி சென்றார். மக்கள் தாங்கள் செய்த தவற்றை எண்ணி கூனி குறுகி நின்றனர்.
#சிந்தனை துளி
- நீங்கள் செய்ய வேண்டிய கடமையை மற்றவர்களிடம் திணிக்கிறீர்களா?
- சுயநல போக்கினால் விலைமதிப்பற்ற ஒன்றை இழக்கும் அபாயத்தில் இருப்பதை அறிவீர்களா?
