எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
வங்கியில் வேலை செய்யும் ஆபீஸர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்க, கடைசி இடமாக திருப்பதிக்கு வந்து சேர்கிறார்கள். பாண்டியனோ நாத்திகவாதி. வழியில் ஒரு இடத்தில் சிறுத்தைப்புலியை தூக்கிக்கொண்டு ஒருவர் செல்வதைப் பார்த்து ஸ்தம்பித்துப்போகிறான் ராஜேந்திரன். பாண்டியனிடம் சொல்ல அவனோ அதை நம்ப மறுக்கிறான்.
விடுதிக்கு வந்து சேர, பாண்டியன் ராஜேந்திரனோடு கோவிலுக்குப் போகாமல் ஊரைச் சுற்றிப்பார்க்க செல்கிறான். கோவில் அடிவாரத்தில் ஒரு பிச்சைக்கார சாமி ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டு பிச்சை எடுப்பதைப் பாண்டியன் ஏளனமாக பார்க்கிறான். அந்த சமயத்தில் படகுப் போன்ற காரில் வந்து இறங்கும் பெரியவர் ஒருவர் பிச்சைக்கார சாமியிடம் ஓடோடி வந்து “சாமி நீங்க ஏன் இங்க வந்து பிச்சை எடுக்கனும்” என கேட்க; “இது ஒரு வேண்டுதல். தொந்தரவு செல்லாமல் போ”, என அந்த சாமியார் சொல்லிவிடுகிறார்.

பாண்டியன் அந்த பணக்கார பெரியவரிடம் விசாரிக்க, அந்த சாமியாரின் பெயர் திருமலைசாமி எனவும் அவர் ஒரு பெரிய சித்த புருஷர் என தெரிய வருகிறது. பிறகு இருவரும் அருவியை நோக்கி காரில் செல்ல, அங்கேயும் திருமலைசாமி தென்படுகிறார். சற்று முன் கோவில் அடிவாரத்தில் இருந்தவர் எப்படி இங்கு நமக்கு முன் வந்தார் என அதிசயிக்கிறார்கள் இருவரும்.
தும்புரு தீர்த்தம் செல்ல பாண்டியன் சாமியிடம் வழி கேட்க அவரை பின்தொடர்ந்து செல்கிறான். ராஜேந்திரனோ நடக்கும் மாயாஜாலம் விஷயங்களைக் கண்டு பயந்து திரும்பவும் கோவிலின் அடிவாரத்துக்குச் செல்லஎத்தனிக்கிறான். நடுவில் சாமியார் பாதையிலிருந்து காணாமல் போய்விட தொடர்ந்து செல்லும் பாண்டியனுக்காக சாமியார் ஒரு மரத்தின் அடியில் காத்திருக்கிறார்.
பாண்டியன் கேட்கும் பல கேள்விகளுக்குப் பதில்களையும் யோக சித்தியைப் பற்றியும் சொல்கிறார் திருமலைசாமி. கோவில் அடிவாரத்துக்குக் செல்ல சில மணிநேரங்கள் காரில் பயணிக்க வேண்டிய நிலையில் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு சில மணி துளிகளில் சென்று அடைகிறார்கள். ராஜேந்திரனுக்கோ பாண்டியனைப் பார்த்ததில் பேரதிர்ச்சி. நடந்தை பாண்டியன் சொல்ல ராஜேந்திரன் அதை நம்ப மறுக்கிறான். பாண்டியனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக நம்புகிறான்.
சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஆபிசர்கள் அறைக்கு வரவும் நடந்தை ராஜேந்திரன் அவர்களிடம் சொல்கிறான். அனைவரும் கடவுள் நம்பிக்கை இல்லாத பாண்டியன் இப்படி மாறிப்போனதைக் கண்டு வியந்து போகிறார்கள். அவர்கள் பாண்டியனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக நம்ப பாண்டியன் திருமலைசாமியை மனதார அழைக்கிறான்.
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்க கதவை திறந்தால் அங்கே திருமலைசாமி நின்றுக் கொண்டிருக்கிறார்!
சித்திகளில் முதலாவது அணிமா! இதன் மகிமை மிக பெரிது. இதை கைவரப் பெற்றவர்கள் ஆறடி உயரத்தை ஒரு அணு துகள்கள் அளவுக்கு ஆக்கிக்கொள்வார்கள். பல அணுக்களின் திரட்சிதான் ஒரு பொருள் ஆகிறது. அதை கூட்டி கொள்வதும் குறைத்து கொள்வதும் அணிமா ஆற்றல் ஆகும். அணிமா ஆற்றலைப் பற்றியும் யோகத்தையும் அறிந்துக் கொள்ள முதல் சக்தியை நாடி தேடி படியுங்கள். |
