எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
கோடியில் புரளும் அருணாச்சலா தன் காரியதரிசியுடன் ஒரு புத்த பிச்சுவைக் காண ஷிகாரா மலையை நோக்கி புறப்படுகிறார். பனி புயல் வீசும் அந்த இடத்தில் போகும் வழி தெரியாமல் தத்தளிக்கும் போது, அந்த பனிக்குளிரில் ஒரு ஒற்றை காவி உடையுடன் வரும் புத்த பிச்சுவைப் பார்க்கிறார்.
அவர்களை தன்னுடன் அழைத்து செல்லும் பிச்சு அருணாச்சலா வந்த காரணத்தை வினவ முதலில் தடுமாறும் அருணாச்சலா பிறகு சொல்கிறார். தனது நண்பர் குப்தாவின் மகன் இறந்த போது அவர் புத்த பிச்சுவின் உதவியோடு மகனின் ஆவியோடு பேசியதாகவும் இந்த முறை மூலம் டாக்குமெண்ட்ஸ் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டதாகவும் சொன்னதைக் கேட்டு தான் வந்திருப்பதாக சொல்கிறார்.
தனது ஆருயிர் நண்பன் சதாசிவத்துக்கு தன்னைப் பற்றிய ரகசியம் தெரியும் எனவும் சதாசிவத்தின் ஆவியோடு பேசவே புத்த பிச்சுவின் உதவியை நாடி வந்திருப்பதாக அருணாச்சலா விளக்குகிறார். இதைக் கேட்டு அந்த புத்த பிச்சு ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்து அதில் இருக்கும் 8 குழி விளக்கை வெளியே எடுக்கிறார். தன் நாவிலே விளக்கு போல் தீயை எரிய வைக்க அதிர்ந்து போகிறார் அருணாச்சலா.
புத்த பிச்சு விளக்கின் உதவிக்கொண்டு சின் எனும் சமாதியான ஒரு மஹாயோகியை அழைக்க அவரின் உதவியோடு சதாசிவத்தின் ஆவி வரவழைக்கப்படும் என சொல்கிறார். இந்த விளக்கு அணையும் முன் ஒரு காகிதத்தில் அவர் சதாசிவத்தின் ஆவியிடம் கேட்க வந்ததை எழுத சொல்கிறார்.
அதில் ‘தன்னால் சிறுவயதில் கைவிடப்பட்ட மாயவரம் வனஜா ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் எனவும் அவனைப் பற்றி நாளை சொல்வதாக கூறிவிட்டு நீங்கள் மாரடைப்பில் இறந்துவிட்டீர்கள்’. தனது கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அந்த பிள்ளையே அதிபதி அதனால் அவனைப் பற்றி விவரம் சொல்லுபடி கடிதத்தில் கேட்கிறார்.
11 நிமிடங்கள் கழித்து அந்த கடிதத்தை எடுக்க சொல்கிறார் புத்த பிச்சு. எடுத்து பார்த்த அருணாச்சலா அதில் அச்சு அசலாக சதாசிவத்தின் கையெழுத்தில் கடிதத்தைப் பார்க்கவும் வெலவெலத்துப் போகிறார். அந்த கடிதத்தில் இந்த விளக்கின் உதவியோடு தன்னைத் தொடர்பு கொண்ட புத்த பிச்சு இன்னும் சில மணிநேரத்தில் இறந்து விடுவார் எனவும் அந்த விளக்கைக் கைபற்றிக் கொண்டு , தன்னை மீண்டு அழைக்கவும் என எழுதியிருக்க திகைக்கிறார் அருணாச்சலா.
விளக்கைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கும் அருணாச்சலாவைப் பார்த்து சிரிக்கிறார் புத்த பிச்சு. சின் தனது குரு எனவும் தனது விதி முடியப்போவதைப் பற்றி தனக்கு ஏற்கனவே தெரியும் என சொல்கிறார். இந்த விளக்கை எடுத்து கொண்டு செல்ல ஷிகாரா மலையின் ஆவிகள் உங்களை விடாது எனவும் தங்கள் நண்பர் சதாசிவம் நல்லவர் இல்லை எனவும் கூறுகிறார்.
செய்த பாவங்களுக்கான வினைகள் எப்போதும் பின்தொடரும் அந்த பாவம் விடவே விடாது என்பதை எடுத்து சொல்வதே இந்த விடவே விடாது! |
|---|
