எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
அரவிந்த் தன் கூட டாக்டராக பணிபுரியும் ரத்னாவிடம் தன் காதலை சொல்ல, அவளோ காதலை ஏற்க மறுக்கிறாள். தோழி ரீனா விசாரிக்க, வசந்தைக் காதலித்தாலும் அதை சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக ரத்னா கூறுகிறாள். தன் குலசாமி கருப்பு உத்திரவு கொடுத்தால் தான் திருமணம் செய்ய முடியும் இல்லையேல் தண்டனை கிடைக்கும் என புதிர் போடுகிறாள் ரத்னா.
முற்போக்குவாதியான ரீனாவுக்கு ரத்னா சொல்வது மூடநம்பிக்கையாக படவே, கேலி செய்கிறாள். அவள் சொன்னது அனைத்தும் மூடநம்பிக்கை என நிரூபிக்க இருவரும் தோட்டக்கார மங்களம் புறப்படுகிறார்கள். அங்கே கிராமத்தில் எல்லாவற்றுக்கும் கருப்புதான். பட்டணத்தில் வளர்ந்த ரீனாவுக்கு இது வினோதமாக படுகிறது.
ரத்னாவின் வீட்டில் ஒரு கை,கண் இழந்த அவளின் சித்தப்பாவைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். ஒரு பெண்ணைப் பலவந்தமாக அடைய முயலும்போது கருப்பு கொடுத்த தண்டனை அது என தெரிய வர மேலும் குழப்பமடைகிறாள். இப்படி நிறைய சம்பவங்கள் நிகழ, நிச்சயம் இது ஒரு மனிதனின் செயலே ஒழிய, கருப்புசாமில்லை என உறுதியாக சொல்கிறாள்.
ஊரும் ரத்னாவும் நம்ப மறுக்கிறார்கள். பட்டணத்து பெண் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறாள் என்றே நினைகின்றனர் ஊர் மக்கள். இடையே ரத்னாவின் அண்ணன் இராஜேந்திரனின் காதல். ஆனால் கருப்புசாமியோ ஏழை செல்லியோடு அவனின் திருமணத்திற்கு பூசாரியின் மூலம் குறி சொல்ல, விவகாரம் மேலும் சூடு பிடிக்கிறது.
- செல்லியுடன் ராஜேந்திரனின் திருமணம் நடந்ததா?
- தோட்டக்கார மங்களத்தில் நடப்பது கருப்புசாமியின் விளையாட்டா இல்லை ஆசாமியின் சூழ்ச்சியா? அவர்கள் ரத்னாவின் குடும்பத்தை குறிவைக்க என்ன காரணம்?
- ரீனா, வாத்தியாரின் மகன் ராஜேந்திரன் மற்றும் சிலரோடு சேர்ந்து இந்த மர்மங்களுக்கு விடை கண்டாளா?
கவிதாலயாவின் மர்ம தேசத்தின் தொடரான விடாது கருப்பு இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். நாவலின் கதை தொடரை விட சற்று மாறுபட்டிருந்தாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை. நிஜ கருப்புசாமியைத் தெரிந்துக்கொள்ள தேடுங்கள், நாடுங்கள் விட்டு விடு கருப்பா!
