எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான்.
மோகனாவும் அவனது காதல் வலையில் விழ, திருமணம் நடக்கிறது. சில நாட்கள் கழித்து அவள் தாய்மை அடைகிறாள். சுமதி கருவிலிருக்கும் போது சுரேந்திரன் மணமானவன் என்ற உண்மை தெரிய வருகிறது.
மோகனாவோ கணவனின் சொந்த கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறாள். சுரேந்திரன் அவளுக்காக ஒரு பெரிய மாளிகையைக் கட்டிக் கொடுக்கிறான். ஆனால் இந்த கிராமத்தில் இருந்தால் இரண்டாம் தாரமான தனக்கு மரியாதை கிடைக்காது என்பதை மோகனா உணர்கிறாள்.
அதனால் மறுபடியும் பூனாவிற்குச் சென்று விடலாம் என முடிவெடுக்கிறாள். அவள் அப்படி சென்றுவிட்டால் சுமதி தனது மகளில்லை என்று சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறான் சுரேந்திரன். அவன் சொன்னதைக் கேட்டு துடித்து போகும் மோகனா, பூனாவிற்குச் செல்லும் முடிவைக் கைவிடுகிறாள். ஆனால் இனிமேல் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என சுரேந்திரனிடம் கூறிவிடுகிறாள்.
சில காலங்கள் இப்படியே உருண்டோடுகிறது. தந்தையிடமிருந்து விலகி இருக்கும் தாயிடம் அடிக்கடி எரிச்சலடைகிறாள் சுமதி. சுமதி மருத்துவராக இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் வினோத் அவளை விரும்புகிறான். தந்தை தாயிடம் சொன்னதைப் பற்றி டாக்டர் கௌதம் மூலமறியும் சுமதி, வினோத்தின் காதலை மறுக்கிறாள்.
குடும்பம் கடமை என்ற சுழலில் மாட்டிக்கொண்ட இரண்டு மனைவிகளின், அன்னைகளின் மனப்போராட்டமே இந்த கானல்வரிக் கவிதை! |
