எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
சுபமதி தன் காலேஜ் நண்பர்களோடு Plants Collection செய்ய காட்டுக்குள் முகாமிடுகிறாள். அவள் மீதும் ஆஷா மீதும் கூட பயலும் ஷியாம் மற்றும் பாபுவின் தப்பான கண் பார்வை படுகிறது. செடிகளைச் சேகரிக்க அனைவரும் காட்டுக்குள் மேலும் நுழைய, அப்போது பார்த்து ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கிறது.
அனைவரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓவ்வொரு திசையில் ஓட சுபமதியோ யானையிடம் தனியாக மாட்டிக்கொள்கிறாள். உடுத்தியிருக்கும் துணியை யானையின் முன்னே வீசினால் அதன் கோபம் துணியின் மீது போகும் என எங்கேயோ படித்தது நினைவுக்கு வர சுபமதி தன் உடலை சுற்றி இருந்த சேலையைக் கழற்றி யானையின் முன் வீசுகிறாள். ஆனால் யானை அதை பொருட்படுத்தாமல் அவளையே துரத்துகிறது.
மீதும் சுபமதி ஓட ஆரம்பிக்க கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைகிறாள். சுய நினைவுக்கு வந்த பின் தன் மீது எதோ கோட் போன்று ஒரு சட்டை இருப்பதாய் உணர்கிறாள். அப்போதுதான் அங்கு ஒரு ஆடவன் இருப்பதாய் பார்க்கிறாள். அவன் தன்னை புவனேந்திரன் என அறிமுகப்படுத்த அவளை காப்பாற்றி , மீண்டும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்கிறான்.

நடந்த விஷயத்தைச் சுபமதி தன் அத்தை பையன் சுந்தரத்திடம் சொல்ல, விஷயம் சுபதியின் தந்தையின் காதுகளுக்குப் பரவ, அவளை அழைத்து கொண்டு வர மறுநாள் காலையிலே புறப்படுகிறார்கள். இரவில் சுபமதி ஆஷாவை அழைத்துக்கொண்டு புவனேந்திரனின் கோர்ட்டை திரும்பவும் கொடுக்க கெஸ்ட் ஹௌஸ்க்கு செல்கிறாள். இருவரும் திரும்பி வரும் சமயத்தில் காட்டில் அவர்களிடம் தவறாக நடக்க ஷியாமும் பாபுவும் காத்திருக்கிறார்கள். சுபமதியும் ஆஷாவும் அருகில் வர, ஷ்யாமும் பாபுவும் அவர்கள் மீது பாய்கிறார்கள்.
அப்பொழுது துப்பாக்கி சத்தம் கேட்க, அங்கே நிற்பது புவனேந்திரன். அவர்களைப் பைனாகுலர் மூலம் பார்த்துவிட்டதாகவும் அவர்கள் தவறான நோக்கத்தோடு தான் அங்கே நிற்கிறார்கள் என்பதை கணித்து விட்டதால், தான் வந்ததாக புவனேந்திரன் சொல்கிறான். அவன் அவர்களை நைய புடைக்க, சுபமதி தடுக்கிறாள். அவர்கள் இருவரையும் ப்ரோபெஸோரிடம் சொல்லி தண்டனை வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறாள்.
சுபமதியும் ஆஷாவும் மறுபடியும் தங்கள் பட்டாளம் இருக்கும் இடத்துக்கு வர அங்கே தந்தையும் சுந்தரமும் காத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுடன் திரும்பி ஊருக்குச் செல்கிறாள். புவனேந்திரனை எண்ணி உருகுகிறாள். ஆஷா அவளிடம் பந்தயம் வைக்க ஒரு வாரத்துக்குள் புவனேந்திரன் சுபமதியைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால் அவனை மறந்துவிடும்படி சொல்கிறாள்.
அப்போது சுந்தரம் வீட்டுக்கு வர தன்னுடன் இரண்டு டிசைனர்கள் இருப்பதாகவும் சுபமதியே டிசைன்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சொல்கிறான். அங்கே செல்லும் சுபமதி அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அங்கே டிசைனர் வேடத்தில் புவனேந்திரன். சுந்தரம் போன் பேச சென்று விட சுபமதி துள்ளிக் கொண்டு ஆஷாவை அழைத்து வருகிறாள். அவர்கள் பேசுவதைச் சுந்தரம் கேட்டுவிட, உருக்குலைந்துப் போகிறான்.
பார்க்கில் சந்திக்கலாம் என சொல்லிவிட்டு புவனேந்திரன் சென்று விட, சுபமதியின் தந்தை ஜோசியரை அழைத்துக் கொண்டு வருகிறார். சுந்தரத்திக்கும் சுபமதிக்கும் ஜாதக பொருத்தம் பார்க்க சொல்ல சுபமதியோ கல்யாணத்திற்கு மறுக்கிறாள். அப்போது ஜோசியர் கூச்சலிட சுந்தரம் வலிப்பு வந்தவன் போல் கீழே விழுந்து கிடக்கிறான்.
ராஜேஷ்குமாரின் மாறுபட்ட படைப்பு இந்த இரண்டாவது தாலி. படித்து மகிழுங்கள்! |
|---|
