எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
தன் பையனைப் பள்ளியிலிருந்து கூட்டிப் போக வந்த வாணி தன்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஷ்யாமை எதேர்ச்சையாக சந்திக்கிறாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திரா எனும் பெண் தன் பையன் சாய் பிரசாத்தைக் காணவில்லை என பயத்தில் வெளிறிய முகத்தோடு வாணியிடம் ஓடோடி வந்து சொல்கிறாள்.
ஷ்யாமும் அந்த பையனைத் தேடும் முயற்சியில் ஈடுபட எத்தனிக்க பையன் இங்கேதான் எங்கேயாவது இருப்பான்; நாங்கள் தேடிக் கொள்கிறோம் என வாணியும் இந்திராவும் புறப்படுகிறார்கள். ஷ்யாமும் கிளம்ப, காரில் அமர்ந்து பின் சீட்டைப் பார்க்கிறான். அங்கே மயக்க நிலையில் இருக்கும் பையனிடம் “உன் பெயர் சாய் பிரசாத்தா” என குரூரமாக சிரித்தபடியே கேட்கிறான்!

இன்று ஒரு பையன் நமது கான்வென்ட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக ஜெயப்பிரகாசம் கவலையுடன் மகள் விபாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதேபோல் ஏற்கனவே காணாமல் போன கமலக்கண்ணன் எனும் பையன் , நான்கு நாட்கள் கழித்து உடம்பில் காயங்களோடு புத்தி பேதலித்த நிலையில் ஒரு புதரில் கண்டுபிடிக்கப்பட்டான். மறுபடியும் இதே போல் சம்பவத்தால் , போலீசின் கடுமையான பார்வை தம் மீது திரும்பியிருக்கிறது என சொல்கிறார். விபாவின் திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் இருக்க இப்படி நடப்பது சரியில்லை என வருந்துகிறார் ஜெயப்பிரகாசம்.
தந்தையை ஆறுதல் படுத்திவிட்டு விபா வெளியில் செல்ல , அவள் காரை ஒரு பெண் நிறுத்தி அவளிடம் பேச வேண்டும் என சொல்கிறாள். பின் சீட்டில் அமர்ந்து கொண்டு , விபா யசோதாவுக்கு பிறந்த பெண்ணில்லை எனவும் அவள் தன் அக்கா அம்சவேணியின் மகள் என அதிரிச்சியளிக்கிறாள். சான்றாக போட்டோ நீட்ட , அதில் அச்சு அசலாக விபாவைப் போலவே ஒரு பெண். தன் அக்கா அம்சவேணிக்கு என்ன நேர்ந்தது என தனக்கு தெரியவேண்டும்; அவள் ஜெயப்பிரகாசத்திடம் விசாரித்து விட்டு தன் வீட்டிற்கு 10 மணிக்குள் வர வேண்டும் இல்லையேல் போலீசுக்கு செல்வேன் என மிரட்டிவிட்டு கோகிலம் சென்றுவிட, விக்கித்து போகிறாள் விபா.
விபா தன் மகள் தான் அம்சவேணி என்ற பெயரில் தனக்கு எந்த பெண்ணும் தெரியாது என ஜெயப்பிரகாசம் சொல்ல , மறுநாள் காலையில் விபா தன் பெற்றோருடன் கோகிலம் சொன்ன முகவரிக்கு செல்ல புறப்படுகிறாள். செல்ல முயலும்போது , வீட்டிற்கு முன் மாப்பிளை வீட்டின் கார். காரில் அண்ணியுடன் இறங்கிவரும் மாப்பிள்ளை, ஷ்யாம்!
திகைக்க வைக்கும் திருப்பங்களோடு கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு! |
