எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
கல்யாணம் நிச்சயமாகிருந்தது வைதேகிற்கு. மாப்பிள்ளை ராமசந்திரன் அவளுக்கு கடிதம் எழுதியிருக்க அதை வெட்கத்தோடு படிக்க ஆரம்பித்தாள். பெண் பார்க்கும் படலத்தில் நடந்ததை குறிப்பிட்டு எழுதிருந்ததை ரசித்து படித்து கொண்டிருந்தவள் அதில் இறுதியாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டு முகம் சுளித்தாள்.
அதில் திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டில் விருந்து நடத்த இருப்பதாகவும் அதற்கு கோட் சூட் வாங்க 1000 ரூபாயை அனுப்பி வைக்கும் மாறு எழுதியிருந்தான். விருந்து வேண்டாமென்றவர்கள் கலந்து கூட பேசாமல் இப்படி பணம் கேட்பதை எண்ணி ஆத்திரமடைந்தாள் அவள். அம்மாவிடம் சென்று முறையிட அவரோ பணிந்து போக சொல்லிவிடுகிறார். ஏற்கனவே கடனை வாங்கி திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கும் அப்பா இப்போது இதை எப்படி சமாளிக்க போகிறார்?
பெங்களூருக்கு குடிபெயர்ந்திருந்த அண்ணனோ கல்யாண விஷயத்தில் சிறிதும் பங்களிக்கவில்லை. எல்லாம் அப்பாவின் தலைமேல். கல்யாணம் ஆகி சென்று விட்டிருந்த இரண்டு அக்காள்களும் கல்யாணத்திற்கு முந்தய நாள் தான் வந்து சேர்ந்தார்கள். இதில் பெரிய அக்காவின் மாமியாருக்கு அப்பா நேரில் சென்று பத்திரிகை கொடுக்கவில்லையே என ஆதங்கம் வேறு.

மண்டபத்திற்கு வந்து சேர்ந்த மாப்பிள்ளை ராமசந்திரன் சீட்டாடுவான் என தெரியவும் வைதேகியின் அண்ணன் சற்று துணுக்குற்றான். இதே போதாதென்று வந்தே உடனே நண்பர்களுடன் சேர்ந்து சீட்டாட ஆரம்பித்துவிட்டான். திருமணத்தை வீடியோ எடுக்க ஆள் வைக்கவில்லையா என ராமசந்திரன் கேட்க , இதற்கு முன் நடந்த இரண்டு தங்கைகளின் கல்யாணத்தில் வீடியோ எடுக்கவில்லை எனவே இந்த கல்யாணத்தில் மட்டும் வீடியோ எடுத்தால் மற்ற இரு மாப்பிள்ளைகளும் கோபித்துக்கொள்வார்கள் என வைதேகியின் அண்ணன் சொல்கிறான். அப்போ நான் கோபித்துக்கொள்ளமாட்டேனா என ராமசந்திரன் பதில் கேள்வி கேட்க வாக்குவாதம் ஏற்படுகிறது.
வைதேகியின் அண்ணன் நிலையை சமாளிக்க , வீடியோ எடுக்க தயார் செய்யுங்கள் அதற்கு நான் பணம் கட்டுகிறேன் சொல்லுகிறான் ராமசந்திரன். நண்பர்கள் அவன் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்க , நான் எங்கே பணம் கொடுக்க போகிறேன் கல்யாணம் முடிந்த பிறகு பெண் விட்டார் கொடுத்து தானே ஆக வேண்டும் என சிரித்துக்கொண்டே சொல்கிறான்.
திருமணம் முடிந்து வைதேகி புகுந்த வீடு செல்ல அங்கே பல அதிர்ச்சிகள் திருப்பங்கள். தான் இருக்கும் வீடு சொந்த வீடு என பொய் சொல்லிருந்தான். அதுவோ வாடகை வீடு. ஜவுளி கடையில் பார்ட்னர் என சொல்லிருந்தான். ஆனால் வேலை செய்யாமல் லாப பணத்தை செலவு செய்யவே பார்ட்னர்ஸ்களிடையே பிரச்னை ஆகி அந்த பார்ட்னெர்ஷிப்பிலிருந்து கல்யாணம் முன்பே வெளியாகிருந்தான். இப்போது வேலையும் இல்லை. இதில் குடி வேறு!
- ஆரம்பமே பொய்யில் ஆரம்பித்திருக்க வைதேகி என்ன முடிவெடுத்தாள்?
- கணவன் மனைவி உறவை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் வைதேகி வேறுவிதமாக இந்த பிரச்சனையை கையாளுகிறாள். அவள் அணுகுமுறை வென்றதா?
