ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான்.
தன் திறமையான தொழிலாளியை இழக்க மனமில்லாதபோதும், தச்சனிடம் இறுதியாக ஒரு வேலையை கொடுத்தார். தனக்காக ஒரு வீட்டை கட்டிகொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். தச்சனோ வேறு வழியில்லாமல் இருமனதாக ஒப்புக்கொண்டான். அவனுக்கு இந்த இறுதி வேலையை செய்ய துளிகூட விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
அதனால் வீடுகட்டும் வேலையை அரை குறையாக செய்தான். தரமில்லாத பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கி வீட்டைக் கட்டினான். பொய்கணக்குக் காட்டி மீதமான பணத்தை தனதாக்கிக்கொண்டான்.
வீடு தயாரானதும் முதலாளியிடம் வீட்டைக் காண்பித்தான். மறுநாள் அதே புதிய வீட்டில் தச்சனுக்கு பெரியஅளவில் பிரியாவிடை நடத்தி அசத்திவிட்டார் முதலாளி. புதிதாக கட்டிய வீட்டின் சாவியை தச்சனிடம் கொடுத்து, “இந்த வீடு உனக்குத்தான். உன்னுடைய அயராத உழைப்புக்கு என்னுடைய பரிசு” என கூறினார் முதலாளி.
அதிர்ந்து போனான் தச்சன்.
வட போச்சே! தனக்கான வீட்டைதான் கட்டினோம் என்று அவனுக்கு மட்டும் முதலிலே தெரிந்திருந்தால்!
#சிந்தனை துளி
- நாம் செய்யும் ஒவ்வொரு விசயங்களிலும் முழுமையான ஈடுபாடுடன், சிறப்பாகச் செயல்பட நம்மை எது தடுக்கிறது?
- நமக்காகவும் பிறருக்காகவும் செய்யும் செயலில் இடுபாட்டின் அளவு ஒரே மாதிரி இருக்கிறதா?
