ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார்.
இவரது முயற்சியைக் நெடுநாளாக கவனித்து வந்த தோட்டக்காரர் ஒருவர் வியப்பு தாளாமல், “ஐயா, ஏன் இவ்வளவு சிரமப்பட்டு பழக் கன்றுகளை நட்டு வரீங்க? இந்த கன்றுகள் வளர்ந்து, பூக்கள் பூக்கும்போதும் காய்கள் காய்க்கும்போதும், அதை உங்களால பார்க்கக் கூட முடியாதே! பின்னே எதற்காக இவ்வளவு கஷ்டப்படணும்” என கேட்டார்.
தோட்டக்காரரைப் பார்த்து புன்னகைத்தார் அந்த முதியவர். “இவை எல்லாம் மற்றவர்கள் பறித்து சாப்பிட. எப்படி நான் யாரோ நட்ட மரத்திலிருந்து பழங்களை பறித்து உண்டேனோ, அதேபோல்”. முதியவர் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போனார் தோட்டக்காரர்.
#சிந்தனை துளி
- இந்த உலகத்தை விட்டு செல்லும்போது மற்றவர்களுக்காக எதை விட்டு செல்லப் போகிறீர்கள்?
- சிறந்த செயல்களையே செய்யுங்கள். நீங்கள் நட்ட செடியானது நாளை மரமாகும்.
