கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் கருத்தைக் கேட்டான்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அவரோ, கண்ணன் எது வரைந்தாலும் அவர் கண்களுக்கு அது சிறந்த சித்திரமாகவே தெரிகிறது எனவும் அவ்வோவியத்தைப் பற்றின அபிப்பிராயங்களைத் தெரிய பொது மக்களிடம் காட்டி அவர்களின் கருத்தைக் கேட்க சொன்னார்.
தந்தையின் சொல்படி கண்ணன், பொதுமக்கள் கூடும் மண்டபத்தின் முன், தான் வரைந்த ஓவியத்தை ஒரு பலகையில் தொங்கவிட்டான். அதன் கீழே, “இது நான் வரைந்த ஓவியம். இந்த சித்தரத்தில் ஏதேனும் குறை இருந்தால், தங்கள் கையொப்பத்தை இட்டு செல்லுங்கள்” என குறிப்பு எழுதினான்.
மறுநாள் ஆர்வமுடன் சென்றவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஓவியம் முழுக்க இம்மி கூட இடமில்லாமல் ஒரே கையொப்பமாக இருந்தது. ஊன் உறக்கமின்றி சிரமப்பட்டு வரைந்த ஓவியம் இப்படி ஆயிற்றே என நொந்துபோனான். தந்தையிடம் தன் வருத்தத்தை கூறினான். ஆறுதல் சொன்ன தந்தை, “குறையைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது கண்ணா. புதிய ஓவியமொன்றை வரைந்து, மீண்டும் அதே இடத்தில் போய் மாட்டு. ஆனால், இம்முறை சித்தரத்தில் ஏதேனும் குறை காண்பவர்கள் தயவுசெய்து குறையைத் திருத்தம் செய்துவிட்டு போகவும், என குறிப்பை எழுதி தொங்கவிடு” என ஆலோசனை கூறினார்.
தந்தை சொன்னதுபோலவே செய்தான் கண்ணன். மறுநாள் அவன் மண்டபத்திற்கு சென்று பார்த்தபோது, ஓவியம் முன்தினம் வரைந்தது போல அப்படியே இருந்தது. அதில் கையொப்பமுமில்லை எந்தவொரு திருத்தமுமில்லை. இதைக் கண்ட கண்ணனின் முகத்தில் உண்மை புலப்பட்ட ஒரு மலர்ச்சி. குறை கூறுதல் சுலபம். குறையைக் களைவது கடினம்!
#சிந்தனை துளி
- பிறர் குறையைக் காண்பவன் அரைமனிதன். தன் குறையைக் காண்பவன் முழுமனிதன்.
- திறமையானவர்களைப் பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமலாவது இருக்கலாமே.
