இளங்கோ செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதற்கு Tiger என பெயரிட்டு, அதனுடனே பாதி பொழுதைக் கழித்தான். திடீரென்று ஒரு நாள், Tiger-க்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, இளங்கோ அதை மருத்துவரிடம் அழைத்து சென்றான். சோதித்துப் பார்த்த அவர், மீன் எண்ணையைக் கொடுக்கச் சொன்னார்.
கொஞ்சமும் தாமதிக்காமல், இளங்கோ ஒரு பெரிய போத்தல் நிறைய மீன் எண்ணையை வாங்கி வந்தான். உடனே நாயை மடியில் வைத்துக்கொண்டு, பெரிய கரண்டியால் மீன் எண்ணையை அதன் வாயில் ஊற்ற எத்தனித்தான். நாயோ பலவந்தமாக எதோ செய்யப்போகிறான் என நினைத்து கொண்டு திமிறியது.
திமிறிக்கொண்டிருக்கும் Tiger-யை, தன் இரு கால்களால் இறுக்கி, அதன் வாயை தன் பலங்கொண்டு திறக்க முற்பட்டான். முயற்சி பலனளிக்காமல், Tiger தப்பியோடியது. தினமும் இதே போராட்டம்தான். விக்கிரமாதித்தன் போல் சளைக்காமல், இளங்கோ அன்றும் மீண்டும் மீன் எண்ணையைக் கொடுக்க Tiger-யுடன் போராடிக்கொண்டிருந்தான். எப்பொழுதும் போல், Tiger திமிறிக்கொண்டு ஓட, இம்முறை இளங்கோ கையிலிருந்த எண்ணெய் போத்தல் கீழே தவறி விழுந்து உடைந்தது.
என்ன ஆச்சரியம்! கொட்டிக்கிடக்கும் மீன் எண்ணையைச் Tiger சாப்பிட்டதுமில்லாமல், இளங்கோவின் கையிலிருந்த கரண்டியையும் வந்து நக்கியது. பிரச்சனை மீன் எண்ணெயால் இல்லை, அதை Tiger-க்கு கொடுத்த முறைதான் என இளங்கோவிற்கு இப்பொழுது தெளியவாக புரிந்தது.
#சிந்தனை துளி
- வாழ்கையில் எது மிகவும் முக்கியம்…கொடுப்பதா? இல்லை கொடுக்கும் முறையா?
- உங்களிடமிருந்து பெற்றுகொள்பவரின் முகபாவனைகளை நீங்கள் கவனித்தது உண்டா? அவர்களின் பெற்றுக்கொள்ளும் முறை உங்களைப் பாதித்திருக்கிறதா?