எழுத்தாளர்: பெருமாள் முருகன்
காதல் திருமணங்களும் கலப்பு திருமணங்களும் சாதியச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை இந்த பூக்குழி நாவல் சொல்கிறது. இந்த இளம் தம்பதியினர் எதிர்நோக்கும் பிரச்சைகளையும் போராட்டங்களையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த நாவலில் சித்தரிக்கிறது.

தன் கிராமத்தை விட்டு வெளியூரில் வேலை செய்ய வந்த குமரேசன் சரோஜாவைச் சந்திக்க அவள் மீது காதல் வயப்படுகிறான். சரோஜாவும் காதல் வலையில் விழ , குமரேசனுடன் ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். சரோஜாவைத் திருமணம் செய்து , தனது கிராமத்திற்கு அழைத்து வருகிறான்.
குமரேசன் சரோஜாவை அழைத்து வருவதை பார்த்து அந்த கிராமமே அதிர்ச்சி அடைகிறது. அவனின் அம்மாவோ அழுது ஊரையே கூட்டுகிறாள். தன் அனுமதி இல்லாமல் மகன் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அழைத்து வந்ததால் , சரோஜாவை வார்த்தையாலே வறுத்து எடுக்கிறாள். ஊராரும் குமரேசனிடம் சரோஜாவை எந்த இனத்தைச் சேர்ந்தவள் என விசாரிக்க , எல்லாம் நம் ஜாதிதான் என சொல்கிறான்.
சரோஜாவிடம் அவளைக் காண ஊர் மக்கள் கண்டிப்பாக வருவார்கள் எனவும் அவர்களிடம் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரித்து விட்டு செல்கிறான். சரோஜாவிற்கோ தனியாக மாட்டிக்கொண்டது போல் உணர்வு. கணவன் இல்லாத நேரத்தில் ஆட்கள் வந்து அவளிடம் பேசுவதும் , குமரேசனின் உறவினன் வெள்ளையன் தவறாக பேசுவதும் , மாமியாரின் ஓயாத தொணதொணதுப்பும் அவளை அதிக எரிச்சலடைய செய்தது.
சரோஜா வேறு ஒரு இனத்தைச் சார்ந்தவள் என தெரியவரவும் , பிரச்னை விஸ்வரூபம் அடைகிறது. இந்த பெரும் சிக்கலைக் கடந்து இந்த இளம் தம்பதியனர் வாழ்ந்தார்களா இல்லை புதையுண்டு போனார்களா? தெரிந்துக்கொள்ள பூக்குழி நாவலை நாடுங்கள்!
