எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் காண எமரால்டு எஸ்டேட் உரிமையாளர் பர்வதராஜன் ஆவலாக இருப்பதாக மனோ கூற, விவேக் அங்கு செல்ல தயாராகிறான். விவேக் எமரால்டு எஸ்டேட் செல்லபோகிறான் என தெரியவும், சமையலாள் வேணுவின் முகம் மாறுகிறது. மலை உச்சியிலிருக்கும் அவரின் டவர் ஹவுஸ்க்கு அனைவரும் போகிறார்கள். இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் பதட்டம். அங்கே மரக்கிளையில் தொங்கிகொண்டிருப்பது சடலம்!
அவ்வுடலின் சதைகள் அழுகி, எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. அந்த உடலின் மேல் ரோஸ் நிற புடவை. இந்த மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்திருக்கலாம் என பர்வதராஜன் கூற, இது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலைதான் என விவேக் உறுதியாக சொல்கிறான். பிணத்தைப் பரிசோதனைக்கு அனுப்ப, மலை உச்சியில் தொங்கி கொண்டிருந்தது ஒரு ஆணின் உடல் என கேஸில் புதிய திருப்பம்.
இரண்டாவது ட்ராக்கில், விளம்பர கம்பெனி முதலாளி ஜோதிபாண்டியன், தன் பார்ட்னர் அமிர்தராஜ் கம்பனியிலிருந்து விலகுவதாகவும், தன் காதலி மஞ்சரியுடன் இணைந்து புது விளம்பர கம்பனி தொடங்கபோவதாக தெரிவிக்கவும் அதிர்ந்துப்போகிறார். அமிர்தராஜ் கம்பனி திறக்க சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டது தெரியவர, ஜோதிபாண்டியன் ஆத்திரத்தில் குமுறுகிறார். ஆனால் அதை வெளிக்காட்டாமல், அவனின் முயற்சியைப் பாராட்டி போலியாக நடிக்கிறார். தனது கையாள் பொன்ராஜிடம் அமிர்தராஜயும் மஞ்சரியையும் கொலை செய்யச்சொல்லி கட்டளையிடுகிறார். விடியக்காலையில் ஜாக்கிங் செய்யும் வழக்கமுள்ள இருவரையும் காரேற்றி கதையை முடிக்க காரில் தயாராக காத்திருக்கிறான். எதிரில் ஜாக்கிங் செய்பவர்களின் canvas shoes சத்தம்!
அடுத்து கதை டெல்லி நோக்கி நகர்கிறது. மக்கள் நலனுக்காகபாடுபடும் முதலமைச்சரைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறது மத்திய அமைச்சு. அதற்கு துணையாக போகிறார் ஆளும் கட்சி MP செங்குட்டுவன். கட்சியின் கூட்டம் நடக்கும் மெரினா பீச்சில், மைக்கில் வெடிபொருள் பொருத்தி, அவர் பேசும்போது வெடிக்க வைக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம், எதிர்கட்சியும் ஒரு தூக்கு தண்டனை கைதியை மாறுவேடம் போட வைத்து, பூமாலை அணிவிக்கும் சாக்கில் சுட்டுவிட திட்டம் தீட்டப்படுகிறது.
- மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் சடலம் யாருடையது? இந்த கொலையில் சமையலாள் வேணு, பர்வதராஜனின் பங்கென்ன?
- ஜோதிபாண்டியனின் சதிதிட்டத்திலிருந்து அமிர்தராஜும் மஞ்சரியும் தப்பித்தனரா?
- துரோகிகளும் எதிரிகளும் விரித்த வலையிலிருந்து முதலமைச்சர் காப்பாற்றப்பட்டாரா?
எதிர்பாராத மரணங்கள், அதிரடி திருப்பங்கள். இம்மூன்று தடைகளும் ஒன்றினையும் கட்டத்தில் ஆச்சரியங்களுக்கு அளவிருக்காது. விவேக் விஸ்வரூபம் எடுக்க, மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதா? உண்மைகள் வெளிவந்ததா? “விவேக் இருக்க பயமேன்” – விறுவிறுப்பின் உச்சம்.
