எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
அலுவலகத்தில் உணவு நேரத்தின் போது பவித்ரா ஏன் கொஞ்ச நாட்களாகவே சற்று மாறுபட்டு இருக்கிறாள் என தோழி மங்கை கேட்கிறாள். பவித்ராவோ அப்படி எதுவும் இல்லை. ஏதாவது விஷயம் என்றால் உயிர் தோழியான அவளிடம் தானே எல்லாம் பகிர்வாள் என பதிலளிக்கிறாள். பவித்ராவைத் தேடி பத்மினி எனும் பெண் வந்திருக்கிறாள் என பியூன் வந்து சொல்லவும் அவள் வரவேற்பறைக்குச் செல்கிறாள்.
வந்திருக்கும் பெண் ஒரு காவல் அதிகாரி என தெரியவும் சற்று பதற்றமடைகிறாள் பவித்ரா. வேலை முடிந்த பிறகு போலீஸ் ஸ்டேஷன்க்கு வரும்படி கட்டளையிட்டு விட்டு செல்கிறார் பத்மினி. அங்கே பவித்ராவிடம் கண்கள் சிவப்பேறிய ஒரு இளைஞனின் புகைப்படத்தைக் காண்பிக்கிறார் பத்மினி. அவன் யார் என்று தெரியாது என பவித்ரா சொல்லவும் , ஆமாம் உண்மைதான் ஆனால் நிச்சயம் பவித்ரா அவனைப் பாத்திருக்கிறாள் என புதிர் போடுகிறாள் பத்மினி.

பவித்ரா குழப்பமாக நோக்கவும் ஆறு மாதத்திற்கு முன் இந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்த பவித்ராவிற்கு மயக்க மருத்து தெளித்து அவளிடம் தவறாக நடந்து கொண்டது உண்மையா என கேட்கவும் அதிர்ந்து போகிறான் பவித்ரா. ஆனால் அந்த சமயம் அவள் தலை கவசம் அணிந்ததால் பவித்ராவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை என சொல்கிறார் பத்மினி. தன் கணவனுக்கு பயந்து எங்கே வாழ்க்கை பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் தான் நடந்ததை வெளியில் சொல்லவில்லை என பவித்ரா கூறுகிறாள்.
தப்பிக்க முயன்ற இந்த குற்றவாளியை போலீஸ் சுட்டு கொன்றுவிட்டது எனவும் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் அவன் வீட்டைச் சோதனைப்போடவும் பத்துக்கும் மேம்பட்ட பென்ட்ரைவ் கிடைத்ததாக பத்மினி விளங்குகிறார். அந்த பென்ட்ரைவில் அவன் பவித்ராவிடம் முறைகேடாக நடந்தது பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
பவித்ரா அந்த பென்ட்ரைவைக் கொடுத்து விடும்படியாக கேட்கவும் முதலில் மறுக்கும் பத்மினி , பிறகு இன்ஸ்பெக்டர் ராஜராஜனைச் சென்று சந்தித்தால்தான் முடியும் என சொல்லிவிடுகிறார். பவித்ராவும் வேறு வழியின்றி அவரைக் காண செல்கிறாள்.
லஞ்சத்தில் ஊறிப்போன ராஜராஜன் பென்ட்ரைவைக்குப் பதிலாக ஒரு பெரும் விஷயத்தைக் கேட்க பவித்ரா அதை கொடுக்க முன்வந்தாளா? வசமாக மாட்டிக்கொண்ட பவித்ரா நிலை இனி என்ன?
