எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
ஆபிஸில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சித்ரா வேலைக்கு செல்லும் வழியில் கணவனின் தோழனைச் சந்திக்கிறாள். அவன் மூலம் கணவன் முரளிக்கு வேலை போய்விட்டது என தெரியவருகிறது. விசாரித்ததில் ஆபிஸ் பணத்தில் கைவைத்துவிட்டான் எனவும் மீண்டும் வேலையில் சேர முன்பணம் கட்டவேண்டும் என தெரியவும் இத்தனை நாட்களாக வேலைக்கு செல்வதுபோல் போக்கு காட்டியவன் மீது எரிச்சல் அடைகிறாள் சித்ரா.
அன்றைய தினம் ஆபிஸ்க்கு செல்லும் சித்ராவை மேனேஜிங் டைரக்டர் பத்மநாபன் தனது அறைக்கு அழைத்து 80 லட்சம் மதிக்கதக்க பணம் நகைகளை 3 நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைக்குமாறு உதவி கோருகிறார். முதலில் பயந்து மறுக்கும் சித்ரா, முதலாளி வற்புறுத்தி கேட்கவே ஒப்புகொள்கிறாள்.
சூட்கேஸில் உள்ள பணம் நகைகளை அரிசி பெட்டியில், முரளி மற்றும் தம்பி ரமேஷ் கண்ணில் படாமல் மறைத்து வைக்கிறாள். அந்த மாலையே பத்மநாபன் சித்ரா தங்கியிருக்கும் ஐஸ்வர்யா அபார்ட்மெண்ட் வந்து பணம் நகைகளும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பெங்களூர் செல்கிறார்.

கணவன் சென்னை சென்றிருக்க, தம்பி இரவு வேலைக்கு போயிருக்க, சித்ராவின் வீடு கதவு நள்ளிரவு மணி 1.05 க்கு தட்டப்படுகிறது. பதைபதைப்புடன் சித்ரா யார் என்று கேட்க, தந்தி அளிக்க வந்தவன் என தெரிந்ததும் கதவை திறக்கிறாள். பேனா எடுக்க சித்ரா உள்ளே செல்ல, தந்தி கொடுக்கும் போர்வையில் வந்தவன், கதவை உள் தாழ்ப்பாளிட்டு, தான் பத்மநாபன் மகன் ஹரிஹரன் எனவும் அவர் கொடுத்த சூட்கேசை கேட்கிறான். சித்ரா அவளிடம் அப்படி ஏதுமில்லை என மறுக்கிறாள். தேடி பார்த்தும் சூட்கேஸ் கிடைக்காமல் போகவே, நாளைவரை கெடுவிதித்து, அவனுக்கு சேரவேண்டிய பொருளை வந்து கொடுக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறான்.
அதே சமயம், பத்மநாபன் பயணித்து கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஒரு மர்ம ஆசாமி நுழைந்து அவரை கழுத்து நெரித்து கொலை செய்கிறான். அப்போது நேரம் நள்ளிரவு மணி 1:05. பத்மநாபன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் சித்ரா. அவள் வீட்டிற்கு பத்மநாபன் ஏன் வந்தார் என போலீஸ் வினவ, முக்கியமான கோப்பு ஒன்றை எடுக்க வந்தார் என சமாளிக்கிறாள் சித்ரா.
அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் பட்டாபிராமன் சித்ராவைத் தேடி வருகிறான். தன் தங்கையின் திருமணதிற்காக செய்திருக்கும் தடபுடலான ஏற்பாடுகளை பற்றிப் சொல்கிறான். இவ்வளவுக்கும் அதிக பணம் செலவாகுமே, என்ன செய்ய போகிறீர்கள் என சித்ரா கேட்க, அதான் உங்களிடம் இருக்கும் 80 லட்சம் இருக்கே என சாவதானமாக சொல்கிறான்.
இவனுக்கு எப்படி தெரிதந்து என சித்ரா முழிக்க, பத்மநாபனும் சித்ராவும் பேசியதை ஒட்டுகேட்டதாகவும் தன் பங்குக்கு 20 லட்சம் வேண்டும் எனவும் இல்லையென்றால் போலீசுக்கு போவேன் என மிரட்டுகிறான்.அவனை ஒருவாறு சமாளித்து அனுப்பிவிட்டு நிமிர்ந்தால், அடுத்து ஃபோனில் ஹரிஹரன். 10 மணிக்கு பொட்டானிக்கல் கார்டன் வர சொல்லவே, அங்கு போனால் ஹரிஹரன் காரில் உயிரில்லாத சவமாக கிடக்கிறான்.
பொது தொலைபேசியில், போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு வீடு திரும்புகிறாள் சித்ரா. அவன் வேலை விசயம் என்னவாயிற்று என சித்ரா வினவ, வேலை கிடைப்பது சிரமம் அதனால் புதிதாக வியாபாரம் ஆரம்பிக்க போவதாக கூறுகிறான். வியாபாரம் என்றால் அதிக செலவாகுமே என சித்ரா கேட்க, அதன் நீ அரிசி பெட்டியில் வைத்திருக்கும் பணம் இருக்கிறதே என விஷமமாக முரளி கூற, அதிர்ச்சியில் உறைகிறாள் சித்ரா!
தங்கையின் திருமணத்திற்கு நகைகள் வாங்க பணம் வேண்டும் என பட்டாபிராமன் நச்சரிக்கவே, அவன் கேட்ட 20 லட்சத்தை யாரும் அறியாமல் சித்ரா கொடுக்கிறாள். பணத்தை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் திரும்பிய பட்டாபிராமன் பின்னால் காலடி சத்தம். திடுக்கிடுகிறான் அவன். இருட்டில் கருப்பான ஓர் ஒருவம் பின்தொடர்ந்து, பணத்தை கொடுக்குமாறு மிரட்ட, அவனோ மறுக்க…கழுத்து நெரித்து கொலை செய்ய படுகிறான் பட்டாபிராமன்..மணி சரியாக நள்ளிரவு மணி 1:05!
- கொலைகளை புரியும் இந்த மர்ம ஆசாமி யார்?
- மேலும் மேலும் அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்க, இந்த இக்கட்டான நிலையிலிருந்து சித்ரா எப்படி வெளிப்பட்டாள்?
நம் துப்பறியும் சிங்கம் விவேக் இந்த கொலை வழக்குகளை விசாரிக்க களமிறங்க இனி வேட்டை ஆரம்பம்….
