எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
நித்யாவும் நிகிலும் காதலர்கள். தாஜ்மஹாலின் முன் நின்று பொழுதை ரசித்து கொண்டிருக்கும் போது , நித்யா தாஜ்மஹாலின் மேலே சிகப்பு பொட்டு தெரிவதாக சொல்கிறாள். அது மெல்ல மெல்ல பெரியதாகி தற்போது தாஜ்மஹால் சிகப்பு நிறமாக தெரிவதாக சொல்ல நிகிலோ அப்படி ஏதும் தன் கண்களுக்குத் தெரியவில்லை என கூறுகிறான்.
திடீரென தூக்கத்திலிருந்து விழிக்கும் நித்யா தான் கண்ட கனவை எண்ணி விதிர்விதிர்த்துப் போகிறாள். கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து இந்த கனவு ஏன் வருகிறது என புரியாமல் குழப்பமடைகிறாள். நிகில் நித்யாவை சந்திரமௌலி எனும் மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து செல்கிறான். அவரோ கனவு வருவது சகஜம் தான் ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி வருவது வினோதமானது என்றும் சிகிச்சை ஆரம்பித்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும் என சொல்கிறார்.
நிகிலின் அப்பா அவனைப் பெண் பார்க்க கட்டாயப்படுத்த , விவரத்தை நித்யாவிடம் சொல்கிறான். நித்திய அவனைப் போக சொல்லிவிட்டு ஒரு பொது தொலைபேசி வழியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணான மிருதலாவுக்கு போன் செய்து நிகில் கல்யாணம் செய்ய தகுதி இல்லாதவன் என சொல்லி போனை வைத்துவிடுகிறாள். நேராக வேலை செய்யும் ஹோட்டலுக்கு ஆட்டோவைச் செலுத்த சொல்கிறாள்.
வேலைக்குச் சென்றவளுக்கு ஒரு பார்சல் வருகிறது. அதிலோ ரத்தக்கறைப் படிந்த சிகப்பு தாஜ்மஹால் படம். அனுப்புனர் பெயரிலோ ஷாஜஹான் மும்தாஜ் என எழுதியிருக்க விக்கித்துப் போகிறாள். உடனே நிகிலுக்குப் போன் செய்து வர சொல்லி இருவரும் சந்திரமௌலியைக் காண செல்கிறார்கள். இடையே பொது தொலைபேசியின் ஊழியன் மூலம் நித்யா போன் செய்து பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திய விஷயம் நிகிலன் தந்தை பிரதாப் சந்தரின் காதுகளுக்கு எட்டுகிறது.
நிகிலும் நித்யாவும் டாக்டரின் கிளினிக்கில் இருக்க மும்தாஜ் எனும் பெண் தான் நிகிலின் மனைவி எனவும் அவனுடன் பேசவேண்டும் என போன் செல்கிறாள். ஆனால் அவன் ரிசீவரை எடுக்கவும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. போன் நம்பரைக் கண்டுப்பிடித்து , அந்த வீட்டின் முகவரிக்குச் சென்றால் வீடோ பூட்டிக்கிடக்கிறது. மேலும் விசாரிக்க அந்த வீட்டில் ஒரு பெண் தீக்குளித்து இறந்துவிட்டதாக தெரிய வருகிறது.
களைப்புடன் வீடு திரும்பும் நிகில் பேச்சு மூச்சின்றி கிடைக்கும் தந்தையைப் பார்த்து அதிர்ந்து போக மருத்துவமனையில் அனுமதிக்கிறான். டாக்டர் ராமாமிர்தம் மூலம் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவருகிறது. டாக்டர் ராமாமிர்தம் சொல்லிவிட்டு டாக்டர் பிரதாப் சாண்ட்ராய்ட் காண அறைக்குள் நுழைய , “சரி ஏன் விஷம் குடித்தது போல் நாடகமாடினீர்கள்” என புன்னகைத்தவாறே கேட்கிறார்.
இதே சமயத்தில் நித்யாவின் அக்கா அமிர்தாவை லாரி ஏற்றி கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் மூலம் அந்த லாரியில் ஆக்ரா ரெஜிஸ்திரேஷன் நம்பர் பிளேட் இருந்ததாகவும் அதில் சிகப்பு தாஜ்மஹால் என எழுதியிருந்ததாகவும் தகவல் குடுத்தார். மேலும் , அந்த லாரியை ஓட்டியது ஒரு முஸ்லீம் பெண் தான் என ஒரு அதிர்ச்சிகரமான தகவலைக் குறிப்பிடுகிறார்.
குழப்பங்களைக் களைய சிகப்பு தாஜ்மஹாலை நாடுங்கள். |
