எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
நிதீஷ் அம்மா அமிர்தவள்ளியுடன் சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் சென்னை செல்வதற்காக காத்திருக்கிறான். அவன் அமிர்தவள்ளியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையாகவும் பொறுப்பாக நடந்து கொள்வதைத் தூரத்திலிருந்து கவனிக்கும் இன்சொல் அவனிடம் உரையாட முயலுகிறாள்.
ஏன் இந்த ஏர்போர்ட்டில் இப்படி ஒரு கெடுபிடி என அமிர்தவள்ளி கேட்க, அதற்கு மலேசியாவிலிருந்து பெய்ஜிங்க்குப் புறப்பட்டு போன விமானம் சமீபத்தில் காணாமல் போனதால் தற்போது சிங்கப்பூர் விமான தளத்தில் பாதுகாப்பு பலமாக இருப்பதாக இன்சொல் சொல்கிறாள். உரையாடலின் வழி அமிர்தவள்ளிக்கு உடல்நலம் சரியில்லை எனவும் மருத்துவம் பார்க்கவே சிங்கப்பூர் வந்ததாக நிதிஷ் சொல்கிறான். இன்சொல்லோ சிங்கப்பூரில் இருக்கும் ஒரு ஐடி கம்பனியில் வேலை செய்வதாக சொல்கிறாள்.
இருவரும் உரையாடிக் கொண்டிருக்க, நிதிஷின் கைத்தொலைபேசி முணுமுணுக்கிறது. அதில் “கடல் கழுகு” பத்திரமாக இருக்கிறதா என ஒரு பெண் கேட்க, ஆம் என பதிலளிக்கிறான். தனது அம்மாவாக நடிக்கும் அமிர்தவள்ளியும் தானும் பத்திரமாக இருக்கிறோம் என கூறுகிறான்.
பிளைட்டில் நிதிஷின் அருகில் அமர்ந்து இன்சொல் தொணதொணக்க எரிச்சலடைகிறான் நிதீஷ். ‘முட்டை உடைந்து விட்டது, சின்ன பெண் எட்டி பார்த்துவிட்டாள்’ என சங்கேத வார்த்தைகள் மூலம் நிதிஷுக்கு அவர்கள் கடத்தி வந்த “கடல் கழுகு” பற்றிய உண்மை யாருக்கோ தெரிந்துவிட்டது என தகவல் வருகிறது. அமிர்தவள்ளி இன்சொலின் மீது சந்தேகம் பட, நிதீஷோ அதை மறுக்கிறான்.
சென்னை ஏர்போர்ட்டில் சுங்க அதிகாரி, நிதீஷ் நண்பனின் அண்ணனாக இருக்கவே, அமிர்தவள்ளியும் நிதீஷும் லாவகமாக தப்பிவிடுகின்றனர். இன்சொல் தன்னை அழைத்து செல்ல காதலன் பிரதாப்புக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள்.
அப்போது அவள் தோள் மீது ஒரு கை விழ, திரும்பி பார்க்கும் இன்சொல் திகைக்கிறாள். அங்கே அவளைச் சுற்றி Customs ஆபீசர்கள். ஆபீசர் மஞ்சுளா நாயர் “எங்கே உன் கூட்டாளி நிதீஷ்?” என கேட்க, அதிரும் இன்சொல், நிதீஷைத் தான் சென்னைக்கு வரும் வழியில் சந்தித்ததாகவும் அவன் தான் கூட்டாளி இல்லை என சொல்கிறாள். ஆபீசர்கள் அவளை நம்ப மறுக்கின்றனர்.
நிதீஷை முதன் முதலாக சந்திப்பவள் ஏன் பயணம் முழுவதும் குறைந்தது ஆறு மணிநேரம் உரையாட வேண்டும் என ஆபீசர்கள் கேட்க நிதிஷ் சாயலில் இறந்து போன தன் அண்ணன் போல் இருந்ததால் அவனிடம் பேசினேன் என இன்சொல் சொல்கிறாள். அந்த நேரம், இன்சுலின் தொலைபேசி சிணுங்க, மஞ்சுளா நாயர் போனை எடுக்கிறாள். போனின் மறுமுனையில் நிதீஷ். “இன்சொல் தப்பிவிட்டாயா? பத்திரமாக இரு” என சொல்லிவிட்டு போனைக் கட் செய்கிறான்.
“இப்போது என்ன சொல்கிறாய். நிதீஷ் நீயும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பதற்கு இந்த போன் உரையாடலே ஆதாரம்” என மஞ்சுளா நாயர் கர்ஜிக்கிறார். தனக்கு சற்றும் சம்பந்தமில்லாத விசயத்தில் ஏன் நிதீஷ் தன்னை மாட்டிவிடுகிறான் என புரியாமல், ஆபீசர்கள் கேட்கும் கேள்விகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி மயக்கமடைகிறாள் இன்சொல்.
மலேசியாவிலிருந்து பெய்ஜிங் புறப்பட்டுப் போன விமானம் காணாமல் போன மர்மத்திற்கான விடையைப் பல திருப்பங்களுடன் படைத்திருப்பதே இந்த வெல்வெட் குற்றங்கள். |
