எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
சினிமா உலகில் பிரபலமான பாடகி அனிதா. பெரும் புகழும் செல்வமும் மிகுந்த அவள் இன்று கணவன் வித்யாசாகர் கேட்ட கேள்வியில் நிலை குலைந்து போயிருந்தாள். தன் உற்ற நண்பனாக ஆசானாக நினைக்கும் மதனுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கணவன் வார்த்தை தாக்குதல் நடத்த பேச்சிழந்து நிற்கிறாள். ஸ்டுடியோவில் பாட்டுப்பாட அழைப்பு வரவே கணவனை நிராகரித்து விட்டு செல்கிறாள். அங்கே தன்னுடன் பாட்டு படும் மதனைக் காணவும் உள்ள குமுறலை வெளிப்படுத்தாமல் இயல்பாக இருக்கிறாள். ஆனால் காலையில் வித்யாசாகர் தனக்கு கால் செய்து தன்னை அவமானப்படுத்தி பேசியதை கூறுகிறான்.

வித்யாசாகரை தான் நேரில் சந்தித்து விளக்கமளிப்பதாக சொல்கிறான் மதன். ஒரு பெரிய விருந்தளிப்பு விழாவில் அனிதாவிற்கு சிறந்த பாடகிக்கான விருது வழங்கப்பட , அதே மேடையில் எங்கிருந்தோ வந்த வித்யாசாகர் மைக்கை அவளிடமிருந்து பிடுங்குகிறான். அதே மேடையில் அனைவரின் முன்னிலையிலும் உனக்கும் மதனுக்கு கள்ள தொடர்ப்பு இருக்கா என கேட்டுவிட கூட்டமே அதிர்ந்து போகிறது. குடிபோதையில் இருக்கும் அவனை மனநோயாளி என சொல்லிவிட்டு அங்கிருந்து விலகுகிறாள். நொறுங்கி போயிருப்பவளை தங்கை சசி ரேகா ஆறுதல் படுத்துகிறாள்.
வீட்டுக்கு வந்து தரைகுறைவாக பேசும் கணவனை வீட்டை விட்டு போகச் சொல்கிறாள். ரோசம் மிகவே அவள் கழுத்திலிருந்த தாலியை பிடிங்கி கொண்டு செல்கிறான். மதன் வித்யாசாகரைச் சந்திக்க செல்ல , அவனோ பிரஸ் மீட்டிற்கு அனிதாவுடன் வரும்படி சொல்கிறான். நிருபர்கள் கூட்டத்தில் இவர்களின் கள்ள தொடர்புக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்லி மதனும் அனிதாவும் கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை காண்பிக்கிறான். இருவரும் அந்த போட்டோ நிஜமில்லை எனவும் ஆத்திரத்தில் அவன் மீது மான நஷ்ட வழக்கு போடப்போவதாக சொல்லிவிட்டு செல்கிறார்கள். இவன் போன்ற ஒரு கணவனுடன் இருப்பதை விட விவாகரத்து செய்வதே மேல் என மதன் அனிதாவிடம் சொல்கிறான்.
வழக்கு போடுவதை பற்றி , மதனும் அனிதாவும் வழக்கறிஞரைச் சந்திக்கிறார்கள். முதலில் போட்டோ உண்மையா அல்லது மோர்ப் செய்யப்பட்டதா என பார்க்கவேண்டும் அதை தான் பார்த்துக்கொள்வதாக சொல்கிறார் அவர். தன் பணத்தில் சம்பாதித்த நிறைய சொத்துகளைக் கணவன் பேரில் வாங்கியதாக அனிதா சொல்ல; அவைகளை மீட்க வழக்கறிஞர் வித்யாசாகரைச் சென்று சந்திக்கிறார். அனைவரின் முன் தனக்கும் மதனுக்கு தொடர்பு இருப்பதாக அனிதா சொன்னால்தான் , சொத்துகளைத் திரும்பி கொடுப்பேன் என கறாராக சொல்லிவிட வழக்கறிஞர் திரும்பி சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் வேலைக்கார பெண்ணும் டிரைவரும் அனிதாவின் வீட்டுக்கு வருகிறார்கள். ஏழு மணியாகியும் அனிதா வெளியே வராததால் வேலைக்கார பெண் காபியுடன் அவளது அறைக்கு செல்ல, அங்கே அனிதா விழிகள் விரிய நைலான் கயிறால் கழுத்து சுற்றப்பட்டிருக்க பிணமாக கிடக்கிறாள்.
அனிதாவின் மேல் சுமத்தப்பட்ட களங்கம் விளக்கப்படுமா? யார் அந்த கொலையாளி?
உண்மைகளைத் தெரிந்துகொள்ள நாடுங்கள்…அது மட்டும் ரகசியம்!
